Skip to main content

எழுபதுகளின் மெட்ராஸும், இன்றைய சென்னையும் - மாசு பற்றி திரைப்படங்கள் நமக்கு சொன்ன செய்தி - ஒரு பகுப்பாய்வு  

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்: தலையில் துண்டு, இடுப்பில் வேட்டி, செருப்பில்லாத  வெறும் கால் - 1967ல் ஒரு கிராமத்தான். அவருக்குப் பட்டணம் அவ்வளவு அந்நியமாக இருக்கிறது. சாலைகளையும், கட்டிடங்களையும், பார்த்து அப்படி வியக்கிறார். அங்குள்ள மனிதர்களைப் பார்த்து ஒரு கல்சுரல் ஷாக் அடைகிறார். விறுவிறுவென வெறும் காலில் நடக்கிறார். அண்ணா சாலையில், கூட்டத்தில் தடுமாறி விழுகிறார். பின்பு தலை தூக்கி "மெட்ராஸ்ஸ்ஸ் நல்ல மெட்ராஸ்ஸ்ஸ்!" என்று பாடிக் கொண்டே அன்றைய மெட்ராஸை  வலம் வருகிறார் நகைச்சுவை நடிகர் நாகேஷ். இந்த பாடல் அன்றைய மெட்ராஸை எதார்த்தமாகப் படம் பிடித்து இருக்கும். அதில் இருக்கும் அந்த காலத்து நகரம், மனிதர்கள், தேடல், தெம்மாங்கு எல்லாம் உயிர்ப்புடன் இருக்கும் இந்த பாடலில். அழகான, தெளிவான, மெட்ராஸ் அது. அவர் நடக்கையில், அங்கங்கே காலி நிலங்கள் தென்படுகிறது. ஆனால் அதில் குப்பை இல்லை! மனிதர்கள் கையில் பையுண்டு, ஆனால் அது நெகிழி இல்லை. அவர்கள் சாமான்களைச் சுமந்து சென்றது சாக்கில், சாப்பாட்டை தூக்கி சென்றது அலுமினிய தூக்கில். இருப்பினும் அந்த பாடலில் நாகேஷிற்கு அந்த காலத்து மெட்ராஸ் பிடிக்கவில்லை! ஏனென்றால், அவர்களைப் போல் மனிதர்கள் வாழ்ந்த கிராமங்கள் சொர்க்க பூமிகளாக இருந்தன அக்காலத்தில். என்னதான் அந்த பாடல் மெட்ராஸை அன்று இகழ்ந்தாலும் ஐம்பது வருடங்கள் கழித்து, இன்று, அந்த பழைய மெட்ராஸை பார்க்கும் போது நமக்குத் தோன்றுவதெல்லாம், ஆஹா! அந்த மெட்ராஸ் ஒரு பொற்காலமே! 

CAG

படம் 1: அன்றைய மெட்ராஸில் நாகேஷ

Madras Nalla Madras Song | Anubavi Raja Anubavi Tamil Movie | Nagesh | MS Viswanathan

சரி, ஒரு திரைப்படத்தை மட்டுமே வைத்து நாம் முடிவுக்கு வந்துவிட முடியாது அல்லவே, அன்றைய மெட்ராஸ் மிகவும் அழகானது தெளிவானது என்று. இதே காலகட்டத்தில் வந்து ஒரு ஆவண திரைப்படைத்தை பாருங்கள், அதிலும் இதே போன்ற தான் இருக்கிறது காட்சிகள்: மக்கள் மிகவும் எளிமையாக இருப்பார்கள், கையில் மஞ்சப்பை, குப்பையில்லாத தெருக்கள், கண்ணாடி பாட்டில்களில் குளிர்பானங்கள் போன்ற பல காட்சிகள் பார்பதற்கே அழகாக இருக்கும்.

CAG

படம் 2: 70 மற்றும் 80களிள் ஆவணப்படுத்தப்பட்ட மெட்ராஸ் நகர காணொளிகள்

Madras 1970s @TimelessMomentsLtd| Chennai Mela @WildFilmsIndia| Madras, India, Market @thekinolibrary| Film industry in Madras @calicocentric

இதுமட்டும் இல்லை, இது போன்ற பல படங்கள் அன்றைய மெட்ராஸில் படமாக்கப்பட்டது. அவற்றில் பல, அன்றைய நிலபரப்பு, ட்ரெண்ட், காதல், கலாச்சாரம், வாழ்வு, நடைமுறைகள் போன்றவற்றை பிரதிபலிக்கும் சமுதாய கண்ணாடிகளாகவும், இன்று நமக்கு ஆவணங்களாகவும் இருந்து கொண்டு இருக்கிறது. இன்று அதைச் சூழ்ந்து பல விவாதங்களும், கருத்துக்களும், அறிவுசார் பரிமாற்றங்களும் நடந்து கொண்டே இருக்கிறது. அப்படி மெட்ராஸிலிருந்து சென்னைவரை நகரம் சந்தித்த பல மாற்றங்கள், வளர்ச்சிகள், சூழலியல் சிதைவுகள், குப்பை, பிளாஸ்டிக், தேவைக்கு அதிகமான நுகர்வு, மாசுபாடுகள் போன்றவற்றை ஒரு சில திரைப்படங்களின் காட்சி, கதைக்களம், வசனம், பாடல்கள், ஆவணக் காணொளிகள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து, பகுப்பாய்வு செய்கிறது இந்த கட்டுரை. வாருங்கள், இப்பொழுது ஐம்பது அறுபது வருடங்களுக்குப் பின்னால் டைம் ட்ராவல் செய்வோம்.

பிளாஸ்டிக்

1957களில் பிளாஸ்டிக்கின் உற்பத்தி இந்தியாவில் தொடங்குகிறது. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக அது சந்தையில் இருக்கும் பல பொருட்களுக்கு மாற்றாகத் தலைதூக்குகிறது. அதில் மிகவும் மோசமாக, நம்மை இன்றுவரை பாதித்துக் கொண்டிருப்பது, ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருட்கள். முப்பது வருடங்கள் கழித்து தொண்ணூறுகளில் முதல் முதலாக இதன் பாதிப்புகள் மக்களுக்குக் கண்கூடாகத் தெரிகின்றது. பின்பு போராட்டம், பிளாஸ்டிக் தடை சட்டம், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்குத் தடை போன்ற சக்கரம் இன்று வரை சுழன்று கொண்டு இருக்கிறது. ஆனால் பிளாஸ்டிக் உற்பத்தியும், பயன்பாடும்   குறையவேயில்லை.

குப்ப சேகரிக்கும் குப்பம்மாவாக நடிகை ஷோபா 

CAG

படம் 3: பசி படத்தில் வரும் ஒரு கயலான் கடை 

PASI MOVIE |தேசிய விருது, தமிழ்நாடு விருது,ஷோபாவுக்கு சிறந்த நடிகை விருது பெற்று தந்த 100 நாள் படம்

70-களில் மெட்ராஸை கதைக்களமாக கொண்ட சில திரைப்படங்களில் ஒன்று பசி திரைப்படம், இது தேசிய விருது பெற்ற ஒரு மிக முக்கியமான படம். அன்றைய மெட்ராஸின் குடிசை பகுதிகளில் மற்றும் இதர மெட்ராஸ் அவுட்டோர் லொகேஷன்களில் எதார்த்தமாக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். அதில் நடிகை ஷோபா குப்பை சேகரிக்கும் குப்பம்மாவாக நடித்து இருப்பார். அன்றைய மெட்ராஸைச் சுற்றிச் சுற்றி அவர் குப்பை சேகரிக்கும் பல காட்சிகளைப் படமாக்கியிருப்பார்கள். அந்த திரைப்படத்தில் ஆவணப்படுத்தப்பட்ட அன்றைய சென்னை மக்களுக்கு பிளாஸ்டிக் பசி இருந்ததாக தெரியவில்லை. குப்பம்மாவின் வறுமையில் அவள் பசியை ஆற்றுவது டீ, பன்; படத்தின் டர்னிங் பாயிண்ட் பிரியாணி! குப்பம்மா, அவள் வாழும் குடிசைப்பகுதி, அதை ஓட்டி உள்ள கால்வாய், அவள் நடக்கும் வீதிகள், குப்பை சேகரிக்கும் சாலைகள் இப்படி எங்கேயும் பிளாஸ்டிக், மற்றும் இன்று இருப்பது போல் எங்கே பார்த்தாலும் குப்பை குவியல்களை  பார்ப்பது அரிதினும் அரிது. சராசரியாக இன்று குப்பைமேடுகளில் குப்பை சேகரிக்கும் மனிதர்களின் பெரும்பாலான வருமானம் பிளாஸ்டிக் மறுசுழற்சியை தழுவி தான் இருக்கிறது என்பது நம்மில் பலருக்கு தெரிந்த விஷயமே, ஆனால் அன்று குப்பம்மா மற்றும் அவளது குப்பை சேகரிக்கும் மொத்த சங்கத்து உறுப்பினர்களும் எதைச் சேகரித்தார்கள் தெரியுமா? காகிதங்களை! ஆம் அவர்கள் சுற்றி சுற்றி தேடி எடுத்து சேர்த்து அன்றைய பசியை போக்கிக் கொண்டது காகிதங்களை வைத்துத் தான். ஏனென்றால், இன்று இருப்பது போல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் குப்பைகளை பார்ப்பது மிகவும் கடினம்! 

அன்றைய மெட்ராஸில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் அதிகமாக இல்லை என்பதற்கு, பசி என்னும் திரைப்படமும் அதில் வரும் காகிதங்கள் சேர்க்கும் கதாபாத்திரங்களும், நிலப்பரப்பும், அந்த திரைப்படம் எப்படி எதார்த்தமாக படமாக்கப்பட்டது என்பதை விளக்கும் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகையின் பேட்டியும் தான் ஒரு திடமான சாட்சி.

மெதுவாக தலைதூக்கும் பிளாஸ்டிக்

CAG

CAG

படம் 4: படத்தில் ஹாஜா ஷெரிப் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் காட்சி மற்றும் ரேவதி பிளாஸ்டிக் பையுடன் நிற்கும் காட்சி 

ANDHA 7 NATKAL |Tamil entertainer film | Bhagyaraj | Ambika | Pandirajan | Senthil Others

Mouna Ragam Tamil Movie Scenes Romantic Scene | Karthik , Revathi Love Scenes|ManiRatnam|RjsCinemas

80-களின் தொடக்கத்தில் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனும் அவரது சிஷ்யனும் வேலை தேடி கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு பரபரப்பான வீதியில் இருக்கும் சில கடைகளுக்கு செல்வார்கள். அப்பொழுது, அங்கே பதிவாகி இருக்கும் கடைகளில்  அன்றைக்கு எமெர்ஜ் ஆகிக்கொண்டு இருந்த பல பிளாஸ்டிக் பொருட்களை நாம் காணலாம். உதாரணமாக, பிளாஸ்டிக் கண்ணாடி, வடிப்பான்கள், சீப்பு என பல பொருட்களை காணலாம். அதேபோல், 80-களின் இறுதியில் வந்த வேறொரு திரைப்படத்தை பார்த்தோமேயானால், அது எழும்பூரில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும், அது ஒரு  சண்டை காட்சி, கதாநாயகன் சில்மிஷம்  செய்யும் சிலரை அடித்து புரட்டி எடுப்பார், அப்பொழுது அங்கும் பல கடைகள் பதிவாகி இருக்கும் அதில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் கவர்களை  அப்பட்டமாக காணலாம். இந்த இரு திரைப்படங்களின் காட்சிகளும் குறிப்பாக எடுத்து சொல்வதின் காரணம், இவ்விரு  திரைப்படங்களும் அங்கு இருக்கும் நிலவரங்களை எதார்த்தமாக ஆவணப்படுத்தி இருக்கும். மெட்ராஸின் 80-களின் தொடக்கம் முதல் இறுதி வரை எப்படி பிளாஸ்டிக் பொருட்கள் நைசாக நமது நகருக்குள் ஊடுருவி பரிணாம வளர்ச்சி அடைந்து இன்று எங்கும் நிறைந்தவையாக இருந்து கொண்டு இருக்கிறது!

ஸ்டைல் என்னும் மாயையில் பிளாஸ்டிக் 

எழுபதுகள் மற்றும் எண்பதுகளில், மெட்ராஸில், கடற்கரை, தெருக்கள் போன்ற பொது இடங்களில் எடுக்கப்பட்ட ஆவணப்படங்கள், திரைப்பட ஷாட்டுகளில்,  குப்பை சிதறிக்கிடப்பதை  காண முடியாது. கான்கிரீட்டில் கட்டப்பட்ட குப்பை தொட்டிகளில் குப்பைகள் சீராக கொட்டப்பட்டு இருக்கும்; அதில் பிளாஸ்டிக் பொருட்களை பார்ப்பது அரிது.

பின் ஏன் இப்படி மாறிப்போனது? ஸ்டைல் என்ற பெயரில்,  தயாரிப்புகளுடன்  சேர்த்து பிளாஸ்டிக்  எப்படி விளம்பரப்படுத்தப்பட்டது? உதாரணமாக ஒரு பாடல் வரியை பாருங்கள்: 

CAG

 படம் 5: ஸ்டைலாக மினெரல் வாட்டர் குடிக்கும் காட்சி

Madrasai Suthi Video Song | May Madham Tamil Movie | Vineeth | Sonali | Manorama | AR Rahman

“மெட்ராஸின் ஹீரோ அது மெட்ரோ வாட்டர்

ஆனா ஸ்டைலுன்னு இப்போ குடி மினெரல் வாட்டர்”                                                                                                                  

1994-ஆம் ஆண்டில் வெளியான “மெட்ராஸ  சுத்திப்பாக்க போறேன்” என்ற திரைப்பாடலின் இந்த வரிகள், மெட்ராஸின் மாறும் நிலையை அழகாக எடுத்துக்கூறியது. இப்பொழுது 70 மற்றும் 80 - கள் போல இல்லை, மெட்ராஸில் நிறைய மாற்றங்கள் - அங்கங்கே குப்பைகள், விளம்பர போர்டுகள், மக்கள், வாகனங்கள், நெரிசல் - அப்படியே மொத்தமாக திருப்பி விட்டது போல் இருந்தது, அந்த பாடலை பார்க்கும் போது. வெறும் ஒரு சில படங்களை ஆய்வு செய்த எனக்கே இப்படி தோன்றியது என்றால், காலம் காலமாக வாழும் சென்னை மக்கள் எப்படி இதை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை யோசித்து பார்த்தேன்! 

CAG

படம் 6: குப்பையும் பிளாஸ்டிக்குமான சமகால சென்னை!

ATTU (2019) Tamil Full Movie HD Exclusive Worldwide Digital Rights 2020 | Rishi, Archana, Yogi Babu  

Official: Sel Sel Video Song | Kaakka Muttai | Dhanush | G.V.Prakash Kumar | Fox Star Studios

Marina movie|Pandiraj|Sivakarthikeyan

1991-களின் உலகமயமாக்கலும், அதன் பிறகு பன்னாட்டு நிறுவனங்களின் வருகையும், விளம்பர உக்திகளும் நம் நுகர்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. அதாவது, நுகர்வோராக இருந்த நம்மை அவர்களின் விளம்பர யுக்திகளால் “ஹைப்பர்” நுகர்வோராக மாற்றியது. இந்த பாடல் வரியை கவனியுங்கள்  “ஸ்டைலுன்னு இப்போ குடி மினெரல் வாட்டர்”என்பது பாடல் வரி இதை பாடிக்கொண்டே பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பது போல் அமைந்து இருக்கும் அந்த காட்சி. ஸ்டைலுக்கும், நாம் குடிக்கும் தண்ணீர்க்கும் என்ன சம்மந்தம்?  தண்ணீர் நமக்கு தேவை தான். ஆனால், அந்த பிளாஸ்டிக் பாட்டில் எதற்கு? இதற்கு முன்னால் பிளாஸ்டிக் பாட்டிலிலா  தண்ணீரை குடித்தோம்? சிந்தித்து பாருங்கள்! இன்று நாம் பார்க்கும் பல பொருட்களில் தேவையே இல்லாமல் பிளாஸ்டிக், உதாரணத்துக்கு சூப்பர் மார்க்கெட்டில் இருக்கும் ஒரு ஆப்பிள் பழத்தின் மேல் போர்த்தப்பட்டு இருக்கும் பிளாஸ்டிக் போர்த்தியை போல. இன்று இந்த பிளாஸ்டிக் எந்த ஒரு தங்குதடையின்றி நமது வாழ்க்கையில் மிகுதியாக ஊடுருவி நம்மை சுற்றி நமது பொதுநலத்திலும், சுயநலத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. 

இந்தியாவில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர்

தொண்ணுறுகளின் தொடக்கத்தில் பிஸ்லெரி பாட்டில் நீர் நிறுவனம் கண்ணாடி பாட்டில்களில் இருந்து பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை விற்பனை செய்ய தொடங்கிய தருணம் அது. மேலும் அதற்கு பிறகு இந்தியாவில் பல பாட்டில் நீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் பெருகின. இன்று பிளாஸ்டிக் பாட்டில் இல்லாத ஒரு கடையை பார்ப்பது விசித்திரம், பட்டி தொட்டி எல்லாம் புகுந்து விட்டது. பாட்டில் நீர்தான் தூய்மையானது என்ற ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையும் நம்மிடத்தில் உருவாகிவிட்டது!  

CAG

படம் 7: 1992ல் தைய்ய தைய்ய பாடல் எடுக்கப்பட்ட ஊட்டி மலைகளில் கண்கூடாக தெரியும் பிளாஸ்டிக் குப்பை 

Movie: Uyire| Directed by : Mani Ratnam| Music by : A. R. Rahman 

சென்னை மட்டும் இல்லை, இது போன்ற இந்தியாவின் அழகிய நகரங்கள், கிராமங்கள் பல இன்று குப்பையெனும் நோயில் சிக்கி சிதைந்து கொண்டுள்ளது, நமது காடுகள், மலைகள், ஆறுகள், விலங்குகள் எல்லாம் செத்து கொண்டு இருக்கின்றன. ஏன் முன்பை போல் இல்லை? இப்படி தான் நம் தாத்தா பாட்டி குப்பைகளை கொட்டினார்களா? இல்லை! அவர்களின் கார்பன் தடத்திற்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமானது. நாம் எப்படி இதை ஈடுசெய்ய போகிறோம்?

முதலில் நிறுத்துங்கள் - தேவையில்லாத பிளாஸ்டிக் பயன்பாட்டை. 

கேள்வி கேளுங்கள் - ஏன் நான் இதை செய்கிறேன் என்று உங்களுக்குள் கேள்வி எழுப்புங்கள், பின்பு, நிறுவனங்களை கேளுங்கள் இதற்கு மாற்று இல்லையா என்று.

சிந்தியுங்கள் - உங்கள் சிந்தனையின் தொடக்கமாக நாளை காலை முதல் இரவு வரை நீங்கள் எவ்வளவு குப்பை கொட்டுகிறீர்கள்; அதில் எதை தவிர்க்கலாம், குறைக்கலாம், மாற்றலாம் என்று சிந்தியுங்கள். மாற்றத்தின் தொடக்கமாக குப்பைகளை தரம் பிரித்து கொடுங்கள். 

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and email addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.